The Lede
www.thelede.co.in
த லீட் - தமிழில்

த லீட் எக்ஸ்க்ளூசிவ்: பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் புகாரளித்த பெண், அவர் துன்புறுத்தப்படவில்லை என்று கூறுகிறார்

த லீடுடனான பிரத்யேக நேர்காணலில், இந்த நால்வர் குழுவால் அவர் பாதிக்கப்படவில்லை ஆனால், பல பேருக்கு உதவி தேவையென்று கூறினார்

Anand Kumar

Anand Kumar

பொள்ளாச்சியின் நான்கு பேர் கொண்ட குழுவினால் பாதிக்கப்பட்டவரின் துயரக்கதை இன்று ஒரு முற்றிலும் வித்தியாசமான திருப்புமுனையை அடைந்துள்ளது.

த லீட், புகாரளித்தவர்களுடன் பேசியபோது அவர்கள்,

செய்வதறியாத நிலையில் காணப்பட்டனர்.

புகாரளிக்க முன் வந்தும் சில அரசியல் நோக்கங்களுக்காக அது இறுதியில் தனக்கே கேடாக விளைந்ததென்று எண்ணுகின்றனர்.

அதன் விவரங்கள் இதோ.

பொள்ளாச்சியில் வசிக்கும் 19 வயது பெண்ணும் அவரது அண்ணனும் த லீடுடன் தொடர்ந்து பேசினர்.

ஜனவரி மாத மத்தியில், சரிதா-விற்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அந்த நால்வருள் ஒருவரான சபரிராஜ் என்பவரிடமிருந்து குறுஞ்செய்திகள் வர ஆரம்பித்திருக்கிறது. பள்ளிப் பருவத்திலிருந்தே சபரிராஜை, ரிஷ்வந்த் என்ற பெயரில் அனைவருக்கும் தெரியும்.

”ரிஷ்வந்த் தனக்கு வாட்சப்பில் குறுஞ்செய்தி அனுப்பினார், அவர் தன்னுடைய பள்ளியில் சீனியரென்று அறிமுகப்படுத்திக்கொண்டார். மேலும், தன்னுடைய மொபையில் எண்ணை வேறொரு நன்கு பரிச்சயமான பெண்ணிடமிருந்து பெற்றதாகவும் கூறினார்,” என்று சரிதா கூறுகிறார்.

ரிஷ்வந்தின் குறுஞ்செய்தி இதோ- “எனக்கு உன்னை தெரியும், பள்ளியில் பார்த்ததுண்டு. உன்னுடைய அண்ணனையும் நன்கு தெரியும்” - இவ்வாறு தொடர்பு ஏற்பட்டு, அது நட்பாக மாறியது.

”இதைத் தொடர்ந்து மூன்று வாரம் கழித்து, ரிஷ்வந்த் என்னும் சபரிராஜ் பிப்ரவரி 12ஆம் தேதி சரிதாவை சந்தித்து தாங்கள் இருவரும் நன்கு அறிந்த உணவகத்தில் மதிய உணவு சாப்பிடலாமென்று ரிஷ்வந்த் பரிந்துரை செய்து நாங்கள் இருவரும் முடிவெடுத்தோம்,” என்றார் சரிதா.

ரிஷ்வந்த் தனது காரில் சரிதாவை அழைத்துக்கொண்டு உணவகத்திற்கு செல்லாமல் அதற்கு எதிரான சாலையில் செல்லும்போதே அவருக்கு சந்தேகங்கள் வந்திருக்கின்றன.

”பின்னர் வண்டியை ஓட்டும்போது தன்னை தொட முயற்சித்ததாகவும், அது தனக்கு மிகவும் சங்கடமாக இருந்ததாகவும், ஒரு கட்டத்தில் பொறுக்க முடியமால் கத்தியதற்கு, ரிஷ்வந்த் கோபமுற்று என்னை அடித்தார்,” என்றும் சரிதா கூறினார்.

அந்த நேரத்தில் ஒரு இருசக்கர வாகனம் (மோட்டார்பைக்) காரை ஓவர்டேக் செய்தபோது சரிதாவை ரிஷ்வந்த் அடிப்பதை அவர்கள் பார்த்திருக்கிறார்கள். இதை ரிஷ்வந்தும் கவனித்திருக்கிறார். உடனே பயந்து சரிதாவை தனது காரிலிருந்து வலுக்கட்டாயமாக சாலையில் இறக்கிவிட்டு சென்றிருக்கிறார்.

சரிதா இதைப்பற்றி யாருக்கும் தெரிவிக்காமல் அமைதியாக வீடு திரும்பியிருக்கிறார். இந்த சம்பவம் பிப்ரவரி 12ஆம் தேதி நடந்திருக்கிறது.

இது இத்துடன் முடிந்துவிடவில்லை. ”அன்றிரவு முதல் எனக்கு திரு, ரிஷ்வந்த், வசந்த் இந்த மூன்று நபர்களிடமிருந்து செல்போனில் அழைப்புகள் வரத்தொடங்கின,” என்றார் சரிதா.

திருநாவுக்கரசும் மற்ற மூவரும் (சபரிராஜ், வசந்தகுமார், சதீஷ்) இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாவர்.

”அவர்கள் ரிஷ்வந்துடன் காரில் சென்றபோது என்னை அவனுடன் சேர்த்து புகைப்படங்களும், வீடியோக்களும் எடுத்ததாக என்னிடம் கூறினர். என்னால் அவர்களின் சித்திரவதையை பொறுத்துக்கொள்ள முடியவில்லை, அதனால் பிப்ரவரி 15ஆம் தேதி என்னுடைய வீட்டில் நடந்ததை தெரிவித்துவிட்டேன். என் அண்ணனிடம் ரிஷ்வந்தின் புகைப்படத்தை காண்பித்து அன்று நடந்தவற்றை முற்றிலுமாக கூறினேன்,” என்றார் சரிதா.

பழிவாங்கும் படலம்

சரிதாவின் அண்ணன் மகேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மிகுந்த கோபத்துடனும் ஆத்திரத்துடனும் தனது நண்பர்களை திரட்டிக்கொண்டு ரிஷ்வந்த் என்கிற சபரிராஜை பிப்ரவரி 16ஆம் தேதி அடித்து துவைத்திருக்கின்றனர்.

வலி பொறுக்கமுடியாமல் சபரிராஜ் தன் நண்பர்களின் பெயரை உளறிக்கொட்ட, அடுத்த நாள் பிப்ரவரி 17ஆம் தேதி காலையில் மகேஷும் அவரது நண்பர்களும் வசந்தகுமாரையும், சதீஷையும் அடித்திருக்கிறார்கள்.

அன்று சாயங்காலமே திருநாவுக்கரசும் இவர்களிடத்தில் சிக்கியிருக்கிறார். நான்கு பேர் கொண்ட குழுவை மகேஷ் தனது நண்பர்களுடன் வேட்டையாடி இருக்கிறார்.

”எங்களுடைய முதல் வேலையே அவர்களை அடித்து அவர்களின் செல்போனில் பதிவு செய்யப்பட்ட என் தங்கையின் வீடியோவை அழிப்பது தான். ஆனால் நாங்கள் அந்த செல்போனை எடுத்து பார்க்கும்போதுதான் தெரிந்தது அதில் என் தங்கையின் வீடியோ இல்லை, ஆனால் பல பெண்களின் வீடியோ இருக்கிறதென்று. அதில் நிறைய பேர் எனக்கு நன்கு பழக்கமானவர்கள், நான்கு பெண்கள் எனக்கு மிகவும் நெருங்கியவர்கள். ஒன்று இரண்டல்ல, நூற்றுக்கும் மேற்பட்ட விடியோக்கள். அதில் இந்த நால்வரும் இருந்தனர். எல்லாவற்றிலும் முக்கிய நபராக சதீஷ் இருந்தார். இந்த வீடியோ தொகுப்புகளில் வெறும் மாணவிகள் மற்றுமில்லை, பல வயது பெண்களும் அடக்கம்,” என்று மகேஷ் த லீடிடம் கூறினார்.

மகேஷ் சற்று யோசித்துவிட்டு அந்த தொகுப்பில் மொத்தம் 105 வீடியோக்கள் இருந்ததாகவும், அதில் பத்திலிருந்து பன்னிரண்டு பெண்களே வெகுவாக காணப்படுகிறார்கள் என்றும் கூறினார்.

மேலும் இந்த நால்வர் குழுவானது இரண்டு அல்லது மூன்று வருடங்களாக இதை செய்துகொண்டிருக்கிறார்கள், பெண்களிடம் இந்த வீடியோவைக் காட்டி மிரட்டி தன்னுடைய பாலியல் ஆசையை நிறைவேற்றிக்கொள்வதற்காகவும், பணத்திற்காகவும் இதை செய்திருக்கிறார்கள் என்று தகவலளித்தார் மகேஷ்.

”ஏனென்றால் அந்த செல்போன்களில் பல வீடியோக்கள் இருந்தது, குறிப்பாக திரு மற்றும் சதீஷுடைய போன்களில். நாங்கள் அந்த செல்போன்களை எடுத்துக்கொண்டு அவற்றை காவல் நிலையத்தில் பிப்ரவரி 17ஆம் தேதியன்று ஒப்படைத்தோம்,” என்றார் மகேஷ்.

மகேஷ் மேலும் கூறியதாவது - ”நாங்கள் ஐந்து வீடியோக்களை எங்களிடம் வைத்துக்கொண்டோம், காவல் நிலையத்தில் ஒப்படைத்து வழக்கு பதிவு செய்தபோது, அவர்கள் காவல் கண்காணிப்பாளரும் (SP), துணைக் காவல் கண்காணிப்பாளரும் (DSP) தேர்தல் பயிற்சிக்கு சென்றிருப்பதாகவும், அவர்கள் வந்தவுடன் இதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளனர்.”

இதற்கிடையில், திருநாவுக்கரசு தன் நண்பர்களுடன், ‘பார்’ நாகராஜ் உட்பட மகேஷை இந்த வழக்கை இத்துடன் விட்டு விலகும்படி மிரட்டியிருக்கிறார்.

‘பார்’ நாகராஜ், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர், காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு பின்பு கட்சியிலிருந்து நீக்கப்பட்டவராவார்.
‘பார்’ நாகராஜ், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர், காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு பின்பு கட்சியிலிருந்து நீக்கப்பட்டவராவார்.

வால்பாறை ரோட்டில் அமைந்துள்ள 'பார்' நாகராஜின் டாஸ்மாக் கடையை எதிர்ப்பாளர்கள் அடித்து உடைத்தனர். இதன் உதவியாளர் முன்னாள் நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார் ஆவார்.

கோபத்தில் எதிர்ப்பாளர்கள் 'பார்' நாகராஜின் கடையை உடைக்கும் காட்சி

சம்மந்தப்பட்ட மகேஷும், சரிதாவும் தனது குடும்ப நண்பரும், அரசியல்வாதியுமான திரு. பழனிச்சாமியை சந்தித்துள்ளனர். அவர் இவர்கள் இருவரையும் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமனை பார்க்க பிப்ரவரி 23 அல்லது 24ஆம் தேதி (தேதி சரியாக தெரியவில்லை) அழைத்துச்சென்றிருக்கிறார்.

ஜெயராமன் பிறகு, காவல் துறையினரிடம் பேசி, இந்த வழக்கின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வைத்திருக்கிறார். பின்னர் சரிதா பிப்ரவரி 24ஆம் தேதியில் எப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கிறார்.

முற்றிலும் புதிய கதை

எப்.ஐ.ஆரில் முற்றிலும் புதிய கதை புனைக்கப்பட்டிருந்தது. சரிதாவே தானாக முழு விருப்பத்துடன் அந்த நால்வருடன் காரில் ஏறினாரென்றும், திருநாவுக்கரசுதான் காரை ஓட்டினாரென்றும் எழுதப்பட்டிருந்தது. மேலும் சபரிராஜ் சரிதாவினுடைய ஆடையை கழட்டும்போது, சதீஷ் அதை செல்போனில் படம்பிடித்தாரென்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

த லீடுடனான சரிதாவின் நேர்க்காணலில் சரிதா கூறியது இதுவே – “நான் சொன்னது தான் சரி, இந்த எப்.ஐ.ஆரில் காவல் துறையினர் பல விஷயங்களை சேர்த்திருக்கிறார்கள், நான் கொடுத்த எப்.ஐ.ஆர் இதுவல்ல,” என்று கூறினார்.

காவல் துறையினர் அந்த பாலியல் வன்முறை கும்பலை பிடிக்கும் வெறியில் இதுபோல் நடந்திராத விஷயங்களை பதிவுசெய்திருக்கக்கூடும். அத்துடன் தற்போது பதவியிலிருக்கும் எம்.எல்.ஏ திரு. பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் சரிதாவிற்காக நடவடிக்கையெடுக்கக் கோரி காவல் துறையினரிடம் கேட்டுக்கொண்டதால் காவல்துறை இதுபோல் பதிவு செய்திருக்கக்கூடும்.

”அந்த வீடியோ தொகுப்புகளில் பார்த்த தனக்கு நெருங்கிய பெண்களை முன்பு தொடர்புகொண்டு காவல் துறையினரிடம் அவர்களது தொடர்பு எண்களை அளித்தபோது அவர்கள் புகார் கொடுக்க தயாராக இருந்ததாகவும் பின்னர் சரிதாவின் எப்.ஐ.ஆரில் நடந்த குழப்பத்தை பார்த்த பின்பு இப்போது காவல் துறையினர் தங்களை தொடர்பு கொண்டால் அவர்கள் தற்கொலை செய்துவிடுவோமென கூறுகிறார்கள்,” என்று மகேஷ் கூறுகிறார்.

”நான் தவறேதும் செய்யவில்லை என்று முற்றிலும் நம்பிக்கை கொண்டதனால் மட்டுமே போலீசாரிடம் புகார் அளித்தேன். அதற்குப்பின்னும் கல்லூரி சென்று வந்தேன் ஆனால் இப்போது எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது,” என்று சரிதா பேசினார்.

ஆனால் இப்போது சரிதாவும் பயப்படுகிறார்.

”முன்பு என்னுடைய வீடியோ எதுவுமில்லை என்று என் சுற்றுவட்டாரத்தில் என்னை நம்பினார் ஆனால் இப்போது மற்ற பெண்களின் வீடியோக்கள் எப்படியோ பரவ ஆரம்பித்த நிலையில் அதிலிருக்கும் பெண் நானாக இருக்கக்கூடுமோ என்று பலரும் சந்தேகப்படுகிறார்கள். இது எனக்கு முற்றிலும் வருத்தத்தை அளிக்கிறது. எனக்குள் இருக்கும் தன்னம்பிக்கையையும் நான் எப்போதோ இழந்துவிட்டேன். எனக்கு கல்லூரிக்கும் செல்ல பயமாக இருக்கிறது,” என்று சரிதா கூறுகிறார்.

”காவல் துறையினர் என்னுடைய முகத்தையும் மற்ற தகவல்களையும் மறைத்துவைப்போம் என்று எங்களுக்கு உறுதியளித்தனர் ஆனால் அவர்களே அந்த விவரங்களை ஊடகத்திற்கு அளித்திருக்கின்றனர். இப்போது மக்கள் அந்த வீடியோவில் இருக்கும் பெண் நான் தான் என்றும் கருணைக்காக போராடுகிறேனென்றும் எண்ணுகின்றனர். இந்த 2-3 நாட்களில் இந்த செய்தி அரசியலாக்கப்பட்டுவிட்டது, நாங்கள் எல்லோரும் பயந்துபோனோம்,” என்றார் சரிதா.

”தினமும் எங்கள் வீட்டின் முன்பு 2 புகைப்படக்காரர்கள் நின்றுகொண்டிருக்கின்றனர், அக்கம்பக்கத்து வீட்டினர் என்ன நடக்கப் போகிறது என்று மிகவும் ஆவலாக உள்ளனர். ஊடகமே பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிறது, “ என்று சரிதாவின் அண்ணன் மகேஷ் கூறினார்.

”இப்போது தான் எனக்கு புரிகிறது ஏன் பாலியல் வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து புகாரளிக்க விரும்புவதில்லையென்று,” என்று சரிதா கூறி முடித்தார்.